நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 13 பேர் பலியானதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நீலகிரிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு, மாநில டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் தனி விமானம் மூலம் கோவை செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவையிலிருந்து அவர்கள் குன்னூர் செல்லும் பயணம், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின் அடிப்படையில் அமையும் எனக் கூறப்படுகிறது.

விபத்து நடந்த குன்னூர் காட்டேரி பகுதியில் தற்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் இருக்கிறார். அவரும் விபத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். உயிருடன் மீட்கப்பட்ட கேப்டனுக்கு 80% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டது.

விபத்து நடந்தது எப்படி?

கோவை சூளூர் விமான நிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக இன்று காலை இரு ஹெலிகாப்டர்கள் சென்றன.

அதில் ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தரையிறங்குவதற்கு வெறும் 10 கி.மீ தூரமே இருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.