“திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், இப்போது என்எல்சிக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கின்றனர். வாக்களித்த மக்களின் நலன்களுக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ள அவர்கள் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அண்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்எல்சியின், சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் தர மறுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை அல்லது நிதி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் ஆசைகாட்டியிருக்கிறது. நிலம் கொடுத்தவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக ஏமாற்றத்தையும், துரோகத்தையும் மட்டுமே பரிசாக அளித்த என்எல்சி நிறுவனத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு கடலூர் மாவட்ட மக்கள் ஏமாற மாட்டார்கள்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் எடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத ஒப்பந்த வேலை, அதை விரும்பாதவர்களுக்கு மொத்தமாகவோ, மாத வாரியாகவோ ஒரு சிறிய தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலம் கொடுத்த மக்களை சுரண்டி, லாபம் ஈட்டி வரும் என்எல்சி நிறுவனத்திற்கு, சுரண்டப்பட்ட மக்கள் மீது திடீர் கரிசனம் ஏற்பட்டிருப்பதும், என்எல்சிக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட மக்களை ஆசை காட்டி ஏமாற்ற மாவட்ட நிர்வாகம் ஆட்சியர் தலைமையில் களமிறங்கியிருப்பதும் வியப்பளிக்கவில்லை. மக்களை ஏமாற்றும் இம்முயற்சி பயனளிக்காது.

என்எல்சி நிறுவனத்திற்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நிலங்கள் சுமார் 25,000 குடும்பங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அந்த குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும் தான் வேலை வழங்கப்பட்டது. மீதமுள்ள 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்று வரை வேலை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

அப்போதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வழங்க முன்வராத என்எல்சி நிறுவனம், இப்போது அந்நிறுவனம் வெளியேற வலியுறுத்தி எனது தலைமையில் பாமக இருமுறை போராட்டம் நடத்திய பிறகும், நிலங்களை வழங்க முடியாது என்று கூறி அளவிட வரும் அதிகாரிகளை பொதுமக்கள் திருப்பி அனுப்பிய பிறகும் தான் என்எல்சி இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்கிறது. இதிலிருந்தே என்எல்சி நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம் என்ன? என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

இப்போதும் கூட நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட 23,000-க்கும் கூடுதலான குடும்பங்களில் வெறும் 1000 பேருக்கு மட்டுமே வேலை வழங்க என்எல்சி முன்வந்திருக்கிறது. அதுவும் எந்த உத்தரவாதமும் இல்லாத ஒப்பந்த வேலை தான். அவ்வாறு தரப்படும் வேலை அடுத்த 99 நாட்களில் கூட பறிக்கப்படக் கூடும். 50 ஆண்டுகளாக தங்களை சுரண்டிய என்எல்சி இப்போது தங்கள் மீது அக்கறை காட்டுவதை போல நாடகமாடுவதை மக்கள் நம்ப மாட்டார்கள்; அவர்கள் என்எல்சி மீது நம்பிக்கையிழந்து விட்டனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் வழிகாட்டுதலில் தான் அனைத்து பணிகளும் நடப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதே அமைச்சர்கள் தான் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், இப்போது என்எல்சிக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கின்றனர். வாக்களித்த மக்களின் நலன்களுக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ள அவர்கள் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர். அவர்களின் முயற்சிகள் பலிக்காது.

உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. அதற்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பவை நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட படிம எரிபொருட்கள் தான். அதிலும் குறிப்பாக நெய்வேலியில் எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி எரிதிறன் குறைந்தது என்பதால் சுற்றுச்சூழலுக்கு கூடுதல் கேட்டை விளைவிக்கும். புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த படிம எரிபொருள் பயன்பாட்டை குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஒரு காரணத்திற்காகவே என்எல்சி நிறுவனத்தை மூட வேண்டும்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக நிலத்தடி நீரை உறிஞ்சி நீர்மட்டத்தை 1000 அடிக்கும் கீழே தள்ளியுள்ளது. ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும் சீரழித்து பாலைவனமாக்கி வருகிறது. என்எல்சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தை அழித்துக் கொண்டிருக்கும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது தான் அனைத்து வகை சிக்கல்களுக்கும் தீர்வு. அதன் மூலம் தான் கடலூர் மாவட்டத்தை சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுக்கும்படி மக்களை நெருக்கடிக்குள்ளாக்க கடலூர் மாவட்ட ஆட்சியரோ, நிர்வாகமோ முயன்றால் அதை பாட்டாளி மக்கள் கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களையும் காப்பாற்றுவதற்காக என்எல்சியை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை எனது தலைமையில் பாமக முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.