தமிழகத்தில் தொழிலாளர்கள் இனி கடைகளில் அமர்ந்து பணியாற்றும் வகையில் கட்டாய இருக்கை வசதிக்கான சட்டத் திருத்தம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் துணிக்கடைகள், நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்ற இன்று சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1947ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் இந்த சட்ட முன்வடிவைப் பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நேரம் முழுவதும் நிற்க வைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்குப் பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இருக்கை வசதி வழங்குவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகக் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் நலத்துறை ஆலோசனைக் கூட்டத்தின்போது தொழிலாளர்களுக்கு இருக்கைகள் வழங்குவது குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அந்தக் கருத்துகளின் அடிப்படையில் இந்தச் சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவர்.

இந்த சட்ட மசோதா செப்டம்பர் 13ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.