ஒற்றுமை யாத்திரையின் குரலை யாரும் மவுனிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கர்நாடகாவில் ஒற்றுமைக்கான பாத யாத்திரையை நேற்று தொடங்கினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அவர் நேற்று நுழைந்தார்.

அவரை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர். ராகுல் காந்தியை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான காங்கிரஸாரும் பொதுமக்களும் நடந்து சென்றனர்.

அப்போது குண்டுலுபேட்டில் அவர் பேசுகையில், “வெறுப்பைப் பரப்பி ஒற்றுமை யாத்திரையை சிதைக்க வேண்டும் என்பது தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் ஒரே இலக்கு. நான் இந்த நடைப்பயணத்தின் போது மக்களின் துயரத்தைக் கேட்கிறேன். அவர்களின் பாடுகளை அறிகிறேன். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல் என இந்த ஒட்டுமொத்த தேசமும் வேதனையை என்னிடம் பகிர்கிறது. இந்த யாத்திரையை எந்த சக்தியால் மவுனிக்க முடியாது. இந்த யாத்திரை தேசத்தின் ஒருமித்த குரல்” என்றார்.

17 மாவட்டங்களில் 511 கிமீ பயணம்: மைசூரு, மண்டியா, துமகூரு, சித்ரதுர்கா, பெல்லாரி, ரெய்ச்சூர் வழியாக தெலங்கானாவுக்கு ராகுல் காந்தி செல்கிறார். கர்நாடகாவில் 21 நாட்களில் 17 மாவட்டங்களில் 511 கிமீ தொலைவை கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரையின்போது மடாதிபதிகள், விவசாயிகள், மகளிர் அமைப்பினர், பட்டியலின மற்றும் பழங்குடி இன அமைப்பினர் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனிடையே தசரா விழாவையொட்டி 2 நாட்கள் பாதயாத்திரைக்கு விடுமுறை அளித்து, அவர் ஓய்வு எடுக்க இருக்கிறார். வரும் 19‍-ம் தேதி பெல்லாரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். அதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரை முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தனது செல்வாக்கை நிரூபிப்பதற்காக 17 மாவட்டங்களிலும் ராகுல் காந்தியை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளார்.