சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளின் ஏரியா சபை உறுப்பினர்களாக பெண்கள், வணிகர்கள், சிறுபான்மையினர் என பல தரப்பினரையும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 48.45 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். கடந்த 2001 முதல் 2011-ம் ஆண்டுக்குள் மட்டும் 27 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் குடியேறியுள்ளனர். இது வரும் 2036-ம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பின்படி நகர்ப்புறங்களில் வாழ்வோர் எண்ணிக்கை 60 சதவீதமாக இருக்கும்.

சமீபகாலமாக கல்வி, வேலை வாய்ப்புக்காக மக்கள் நகர்ப்புறங்களில் குடியேறுவதை கருத்தில் கொண்டு, கிராமப்புறங்களில் செயல்படுத்தப் பட்டு வரும் கிராம சபை போன்று நகர்ப்புறங்களில் ஏரியா சபைகளை உருவாக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏரியா சபைகள் அமைப்பதன் நோக்கம், வார்டுக்கு தேவையான திட்டங்களை பரிந்துரைப்பது, குறைகளை தெரிவித்து தீர்வு காண்பது போன்ற பணிகளை, அதே பகுதியில் வசிப்பவர்களைக் கொண்டு மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.

அதன்படி, பிற மாநிலங்களில் ஏற்கெனவே ஏரியா சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் ஏரியா சபை நிறுவும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன. அதற்கான வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதில், ‘ஏரியா சபைகளின் உறுப்பினர்களை அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் நியமித்துக்கொள்ளலாம். 3 மாதங்களுக்கு ஒருமுறை சபை கூட்டத்தை கூட்ட வேண்டும். அந்தந்த வார்டுகளுக்குள் வரும் ஏரியா சபைகளின் தலைவராக வார்டு கவுன்சிலர் இருப்பார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை உள்ளிட்ட மக்கள் தொகை அதிகமாக இருக்கும் மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வார்டிலும் 10 ஏரியாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் ஏரியா சபைகளுக்கான எல்லைகள் குறித்த வரைபடங்கள் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல, பிற நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில், “ஏரியா சபையில் 6 உறுப்பினர்களை கவுன்சிலரும், 4 உறுப்பினர்களை ஆணையரும் நியமிக்க வேண்டும். பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 2 பேர், மகளிர், முதியோர், கல்வியாளர், பொறியாளர், மருத்துவர், வறுமை ஒழிப்பு பணியில் ஈடுபடுபவர், ஆசிரியர், சமூக சேவகர், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் போன்றவர்களை நியமிக்க வேண்டும்’ என வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில், “குறிப்பிட்ட ஏரியா சபையில் வாக்காளராக இருப்போரை மட்டுமே ஏரியா சபை உறுப்பினராக நியமிக்க வேண்டும். 10 உறுப்பினர்களில், ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பை சேர்ந்த 2 பேர், மகளிர் 3 பேர், குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் 2 பேர் இருக்க வேண்டும். கவுன்சிலர் 90 நாட்களுக்குள் பெயர்களை பரிந்துரைக்காவிட்டால், ஆணையரே பரிந்துரை செய்வார்” என வழிகாட்டுதல் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், மகளிருக்கு 50 சதவீதத்துக்கு குறையாமல் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசு, ஏரியா சபைகளில் 50 சதவீத உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தவில்லை. மகளிர் குழு, வணிகர், சாலையோர வியாபாரி, பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகி, குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி, சிறுபான்மையினர் உள்ளிட்டோருக்கு பிரதிநிதித்துவம் வழங்க விதிகள் இல்லை. கட்சிக் காரர்கள், கூட்டணி கட்சிக்காரர்களே உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

இந்த பதவிகளை பிடிக்க, மாநிலத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் தலையிடும் அளவுக்கு கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் ஏரியா சபையின் நோக்கமே பாழாகும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவிடம் கேட்டபோது, “மகளிரையும் உறுப்பினர்களாக சேர்க்க அறிவுறுத்தி இருக்கிறோம். இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்” என்றார்.

நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன்னய்யாவிடம் கேட்டபோது, “பெண்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்பது நல்ல யோசனைதான். முதல்வர், அமைச்சரோடு கலந்துபேசி, ஏரியா சபை உறுப்பினர் நியமன விதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது” என்றார்.