“வடக்கு, தெற்கு என பிரித்துப் பார்க்க கூடாது” என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவுக்குச் சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்தியத் திரைப்படங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில், ”4 ஆண்டுகள் கழித்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிற்கு எனது படம் திரையரங்குகளில் வெளியாகிறது. நான் திரும்பி வந்துவிட்டேன். என்னுடைய படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

ரசிகர்கள் அலட்சியம் காட்டியிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் எப்போதும் என்னை இந்தியனாகவே கருதுகிறேன்.

இந்தியாவில் எந்த இடத்திலும் என்னால் வாழமுடியும். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் அதுதான் அழகு. வடக்கிலும், தெற்கிலும் உள்ள அபராத் திறமைகளை நான் அறிவேன். அவற்றை பிரித்துப் பார்க்க கூடாது என நான் நினைக்கிறேன்.

இந்தியாவிலிருந்து தயாரிக்கும் திரைப்படங்கள் உலக அளவில் சென்றடைகின்றன. இந்தியத் திரைப்படங்கள் சர்வதேசப் படங்களாக மாறுவதற்கு நீண்ட காலம் கடந்துவிட்டது. படைப்பு சுதந்திரத்தில் அரசாங்கம் தலையிடக்கூடாது. நாம் உலக சினிமாவின் மொழியை பேச வேண்டும். அதுதான் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது” என்றார்.