வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம், “எங்களது பாதுகாப்புத் துறை கண்காணித்ததில் வட கொரியா அதன் தலைநகர் பியோங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்தது தெரியவந்தது. இந்த ஏவுகணைகள் 360 கிமீ தூரம் செல்லும் தன்மையுடையன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் இந்த ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனையை ஜப்பானும் உறுதி செய்துள்ளது. மேலும், தொடர்ந்து ஏவுகணை பரிசோதனை செய்யும் வட கொரியாவின் நடவடிக்கையை ஏற்று கொள்ள முடியாது என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனையை அமெரிக்காவும் கண்டித்துள்ளது.

வடகொரியா ஜனவரி மாதம் ஏவுகணை பரிசோதனை ஒன்றைச் செய்தது. 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா இதுவரை 10 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது என்று வட கொரியாவை ஐ.நா. கடந்த ஆண்டு கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.