கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழப்பு தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு பள்ளி சூறையாடப்பட்டது. இதைக் கண்டித்து, தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்படும் என தனியார் பள்ளி சங்கங்கள் அறிவித்திருந்தன. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

இருப்பினும் கோவை மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகள் நேற்று விடுமுறை அளித்திருந்தன. அதன்படி, மாவட்டம் முழுவதும் சிபிஎஸ்இ, மெட்ரிக், பிரைமரி பள்ளிகள் என 30 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை என தெரியவந்துள்ளது. அந்த பள்ளி நிர்வாகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்று ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் 61 தனியார் பள்ளிகள் நேற்று இயங்க வில்லை. சில பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அலைபேசி எண்ணுக்கு, காரணத்தை அறிவிக்காமல் பள்ளி விடுமுறை என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சில பள்ளிகள், மழையால் விடுப்பு என அறிவித்திருந்தன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சு.வினீத் கூறும்போது: “பள்ளிகள் இயங்க வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தெரியப்படுத்தி இருந்தோம். விதிகளை மீறிய தனியார் பள்ளிகள் மீது, மெட்ரிக் பள்ளி இயக்குநரகத்தின் வழிகாட்டுதலோடு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் 2 பள்ளிகள், உதகையில் 4 பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் 10 பள்ளிகள் இயங்கவில்லை. அந்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்ட தனியார் பள்ளி சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் கூறும் போது, “கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமாக, தனியார் பள்ளிகள் இயங்காது என எங்கள் சங்கம் சார்பில் தீர்மானித்தோம். எங்கள் தீர்மானத்தை ஏற்று, அவரவர் விருப்பத்தின்பேரில் சில பள்ளிகள் விடுமுறை அளித்துள்ளன” என்றார்.