சென்னை: போராட்டம் நடத்தும் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015-ம் ஆண்டில் இருந்து 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” எம்ஆர்பி செவிலியர்கள் போராட்டம் நடத்துவது தவறல்ல. பணி நிரந்தரம் செய்வது குறித்து தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான வழிமுறைகளை சுகாதாரத் துறை தொடர்ந்து பரிசீலித்து வருகிறது.
தேவைப்பட்டால் எம்ஆர்பி செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூட சுகாதாரத்துறை தயாராக உள்ளது. செவிலியர் சங்கங்கள் ஒன்பதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. ஒரு சில சங்கங்கள் செவிலியர்களை போராட்டத்திற்கு தூண்டிவிடுகின்றன.
செவிலியர்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும். பத்தாண்டு காலம் பொறுத்திருந்த செவிலியர்கள் மேலும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும். தற்போதைய அரசு செவிலியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நிச்சயம் செய்து கொடுக்கும். எனவே, அரசின் மீது நம்பிக்கை வைத்து செவிலியர்கள் பணிக்கு திரும்பவேண்டும்” என்று தெரிவித்தார்.