தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

வாரத்தின் எல்லா நாட்களிலும் கோயில்களைத் திறக்க வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளை அரசு கண்டுகொள்ளவில்லை.

பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், உணவகங்கள் என்று திறந்திருக்கும்போது, வழிபாட்டுத் தலங்களை மட்டும் மூடுவது வஞ்சக எண்ணமாகத்தான் இருக்குமே தவிர, வேறு காரணங்கள் இருக்க முடியாது.

கோயில்கள் திறக்காததற்கு காரணமாக கரோனா தொற்றைக் கூறுவது நகைப்புக்குரியது. மேலும், கோயிலை மட்டுமே நம்பியிருக்கும் சிறு, குறு வியாபாரிகள், தேங்காய், பூ, பழம் விற்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறக்கக் கோரி, வரும் 7-ம் தேதி காலை முக்கிய கோயில்கள் முன் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நவராத்திரிப் பண்டிகை நெருங்குவதால், உடனடியாக இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்துக்கு பிறகும் கோயில்களைத் திறக்காவிட்டால், இதை மக்கள் இயக்கமாக மாற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.