ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர்களுக்கான ஹாக்கி பிரிவில் நியூஸிலாந்து அணியை 2-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கியுள்ளது. இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், ரூபேந்திரசிங் பால் ஒரு கோலும் அடித்தனர்.

ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியுடன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்பெயின், அர்ஜென்டியா ஆகிய நாடுகள் உள்ளன. அடுத்துவரும் போட்டிகள் இந்திய அணிக்குச் சவாலாக இருக்கும்.

டோக்கியோவில் நேற்று தொடங்கிய ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி விளையாட்டில் இந்திய ஆடவர் அணி முதல் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து ஆடவர் அணியை எதிர்த்து மோதியது.

கேப்டன் மன்பிரீத் சிங் தலைமையில் இந்திய அணி இந்த முறை களம் காண்கிறது. ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் நியூஸிலாந்து அணிக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய நியூஸிலாந்து வீரர் கேன் ரஸல் முதல் கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.

நியூஸிலாந்துக்கு பதிலடி தரும் வகையில் 10-வது நிமிடத்தில் இந்திய அணி கோல் அடித்து சமன் செய்தது. இந்திய வீரர் ரூபேந்திர பாலுக்கு கிடைத்த பெனால்டி ஸ்ட்ரேக்கை அருமையான கோலாக மாற்றினார், நியூஸிலாந்து கோல்கீப்பர் லியான் ஹேவார்டால் அதை தடுக்க முடியவி்ல்லை.

இரு அணிகளும் 1-1 என்ற கோல்கணக்கில் களத்தில் மிகவும் பரபரப்பாக மோதினர் முதல் காலிறுதியில் இரு அணிகளும்1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர்.

2-வது காலிறுதியில் 26-வது நிமிடத்தில் இந்திய அணி கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்திய வீரர் ரூபேந்திர சிங் பால் தட்டிக் கொடுத்த பந்தை, ஹர்மன்ப்ரீத் சிங் கோலாக மாற்றினார். 2-வது காலிறுதியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

3-வது காலிறுதி தொடங்கியபின் ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னரை ஹர்மன்பிரீத் கோலாக மாற்றி 3-1 என்ற கோல்கணக்கில் முன்னிலைபெறச் செய்தார்.

இதற்கு பதிலடியாக 43-வது நிமிடத்தில் நியூஸிலாந்து அணி வீரர் வில்ஸன் கோல் அடித்து அணிக்கு 2-வது கோலைப் பெற்றுக்கொடுத்தார். அதன்பின் இந்திய அணி தடுப்பாட்டத்தைக் கையாண்டு நியூஸிலாந்து வீரர்களை கோல் அடிக்க விடாமல் தடுத்தனர். இதனால் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணியை 2-3 என்ற கோல்கணக்கில் இந்திய அணி வென்றது.