ஒமைக்ரான் எச்சரிக்கையால் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு போதிய வசதி செய்யப்படவில்லை என்றும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கை சரியில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வீரியமிக்கதாக இருக்குமென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் தீவிரப்படுத்திஉள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் இந்த நாடுகளில் இருந்துவரும் அனைத்து பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் முடிவு தெரிய3 முதல் 4 மணி நேரம் ஆகிறது.அதுவரை பயணிகள் விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தொற்று பாதிப்பு இல்லை என தெரிந்தபின் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பரணிதரன் தலைமையில் 3 குழுக்களாக மருத்துவர்கள் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்கின்றனர். விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலையம் சென்றவுடன் பயணிகளுக்கு ரூ.700 கட்டணத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதேபோல் பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிவிக்க அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை.பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.

மேலும் நேற்று முன்தினம் அதிகாலை முதல் கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுஉள்ளது. நேற்று மதியம் வரை குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து சென்னை வந்த 600-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், யாருக்கும் தொற்று பாதிப்பில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு குறைபாடு இருப்பதாகவும், உணவின் விலை அதிகமாக இருப்பதாகவும், பரிசோதனையில் சரியான முறை கடைபிடிக்கப்படவில்லை என்றும், பரிசோதனை மேற்கொள்வதால் நிம்மதியாக இருப்பதாகவும் பல்வேறு பயணிகள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.