இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் மெல்ல அதிகரித்து 200 பேரை எட்டியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதிலும் எச்சரிக்கை பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வருவோருக்குக் கட்டாய ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் நெகட்டிவ் இருந்தால் மட்டுமே வெளியே அனுப்பப்படுகிறார்கள்.
இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் ஒமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் நுழைந்துவிட்டது. ஒன்று என கணக்கைத் தொடங்கிய ஒமைக்ரான் தற்போது 200 பேராகப் பெருகிவிட்டது. இந்த 200 பேரில் 77 பேர் குணமடைந்து அல்லது வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
இதில் அதிகபட்சமாக டெல்லி, மகாராஷ்டிராவில் தலா 54 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தெலங்கானா (20), கர்நாடகா (19), ராஜஸ்தான் (18), கேரளா (15) குஜராத் (14) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 5,326 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 581 நாட்களில் இது மிகக் குறைவாகும். இதுவரை இந்தியாவில் 3.48 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 79 ஆயிரம் பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 453 பேர் கரோனாவால் உயிரழந்துள்ளனர்.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனில் 91 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர் இதில் 13 ஆயிரம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளது. அதேபோல அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம் பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.