ஓமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக தலைமைச் செயலர் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இன்று மதியம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்துமாறும், கரோனா பரிசோதனைகளை அதிகரித்து தொற்று கண்டறிதலை வேகப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பரவல் குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா வேற்றுருவம் (Variant) மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதன்முதலில் இங்கிலாந்தில் ஆல்பா எனும் வேற்றுருவமும், அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா, இந்தியாவில் டெல்டா வேற்றுருவங்களும் கரோனா வைரஸில் அறியப்பட்டன.

இவற்றைவிட இப்போதைய புதிய வைரஸ் அதிவீரியமானது எனும் எச்சரிக்கை வந்துள்ளது. ‘ஒமைக்ரான்’ (Omicron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு (Mutation) ஏற்பட்டுள்ளது.

இது வேகமாகப் பரவும் தன்மை கொண்டுள்ளதாலேயே உலக நாடுகள் இந்த வைரஸ் குறித்து அச்சம் கொண்டுள்ளன. இஸ்ரேல் தனது நாட்டு எல்லைகளை மூடியுள்ளது. இந்தியா, டிசம்பர் 15 ஆம் தேதி சர்வதேச விமானப் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த நிலையில் அதனை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது.

மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கை கொடுத்துள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அ ரசு எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பரிசோதனை தீவிரப்படுத்தி, கண்காணிப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தேவை ஏற்பட்டால் தனிமைப்படுத்தப்பகுதிகளை உருவாக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாலர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இத்தகைய சூழலில் தான் இன்று தமிழக தலைமைச் செயலர் மாவட்ட ஆட்சியர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறார்.