கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரானுக்கு உலக நாடுகள் அஞ்சிவரும் நிலையில், மேற்கத்திய நாடுகளையும், அமெரிக்காவையும் டெல்மைக்ரான் வைரஸ் மிரட்டி வருகிறது. அதென்ன… ஒமைக்ரான் வைரஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்ன ‘டெல்மைக்ரான்’ வைரஸ்? ஒமைக்ரானிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறது, பாதிப்பு எப்படி இருக்கும்? – அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்கள் இதோ…

டெல்மைக்ரான் என்றால் என்ன? – கரோனா வைரஸின் இரட்டை திரிபுதான் ‘டெல்மைக்ரான்’ வைரஸ். ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் வேகமாக டெல்மைக்ரான் வைரஸ் பரவிவருகிறது. அதாவது, கரோனா வைரஸின் உருமாற்றமான டெல்டா வைரஸ், ஒமைக்ரான் வைரஸ் ஆகிய இரு குணங்களையும் கொண்டதுதான் ‘டெல்மைக்ரான்’ வைரஸ்.

மகாராஷ்டிரா கோவிட் தடுப்பு குழுவின் மருத்துவர் ஷசாங் ஜோஷி கூறுகையில் “ஐரோப்பிய நாடுகளிலும், அமெரி்க்காவிலும் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ் குணங்களைக் கொண்ட டெல்மைக்ரான் வைரஸ் பரவிவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்மைக்ரான் எங்கு பரவுகிறது? – டெல்மைக்ரான் வைரஸ் இரட்டை திரிபுநிலை கொண்டதால், ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது டெல்டா வைரஸ், ஒமைக்ரான் வைரஸ் ஆகிய இரு வைரஸ்களும் உலகம் முழுவதும் வந்துவி்ட்டது. இரு வைரஸ்களின் இணைப்புதான் டெல்மைக்ரான். இந்த வைரஸின் தாக்கத்தால்தன் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் மீ்ண்டும் கோவிட் தொற்று வேகமெடுத்துள்ளது.

யாரை டெல்மைக்ரான் தாக்க வாய்ப்பு? – உடலில் குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி இருப்போர், மூதியோர், இணை நோய்கள் இருப்பவர்கள், தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் தனிநபர்களுக்கு டெல்மைக்ரான் வைரஸ் தாக்கும் வாய்ப்புள்ளது. இரு வைரஸின் குணங்களின் இணைவு என்பது சூப்பர் ஸ்ட்ரைனாக மாறிவிடும் என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் பீட்டர் வொய்ட் தெரிவித்துள்ளார்.

டெல்மைக்ரான் தாக்கம் இந்தியாவில் இருக்குமா? – மகாராஷ்டிரா கோவிட் தடுப்பு குழுவின் மருத்துவர் ஷசாங் ஜோஷி கூறுகையில் “இ்ந்தியாவில் பெரும்பாலும் டெல்டா வைரஸ் பாதிப்புதான் தீவிரமாக இருக்கிறது, டெல்டா வைரஸ் பரவிய வேகத்தைவிட ஒமைக்ரான் வேகமாக உலகம் முழுவதும் பரவிவருகிறது. ஆனால் டெல்டா, ஒமைக்ரான் கூட்டிணைவு எவ்வாறு செயல்படும் என்பதை கணிக்க முடியவில்லை. மும்பையில் செரோ சர்வேயில் 90 சதவீதம் மக்களுக்கு கரோனா பாதித்துவிட்டது தெரியவந்துள்ளது; 88 சதவீத மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி ெசலுத்திவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்

டெல்மைக்ரான் அறிகுறிகள் என்ன? – டெல்டா, ஒமைக்ரான் பாதிப்பில் இருக்கும் அதே அறிகுறிகள்தான் டெல்மைக்ரானிலும் இருக்கும். அதிகமான காய்ச்சல், தொடர் இருமல், சுவை, மணம் அறிதலில் மாற்றம், தலைவலி, மூச்சில் நீர்வடிதல், தொண்டை வலி, கட்டிக்கொள்ளுதல், கரகரப்பு போன்றவை இருக்கும்.

ஒமைக்ரான் பாதிப்பு இந்தியாவில் எப்படி இருக்கும்? – அசோகா பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் டாக்டர் ஷாகித் ஜமீல் கூறுகையில் “டெல்டா வைரஸ் இந்தியாவை பாடாய் படுத்தி எடுத்ததைப்போல் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்காது. இந்தியாவில் கரோனா 2-வது அலை மோசமாக இருந்தது. பலரும் கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும், இதுதவிர தடுப்பூசி செலுத்தும் அளவும் அதிகமாக இருப்பதால் ஒமைக்ரான் பாதிப்பு பெரிதாக இருக்காது” எனத் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது? – டெல்மைக்ரான் வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது ஒமைக்ரான் பாதிப்பின் புள்ளிவிவரங்களையும், டெல்டா புள்ளிவிவரத்தையும் ஆய்வு செய்து வருகிறது.