Site icon Metro People

ஒமைக்ரான் பாதிப்பு: மும்பையில் இரு நாட்களுக்கு 144 தடை உத்தரவு

மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்த நிலையில் வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் வகையில் மும்பையில் 144 தடை உத்தரவைக் காவல்துறையினர் பிறப்பித்துள்ளனர்.

இந்த உத்தரவின்படி பேரணிகள் நடத்துதல், கூட்டம் கூட்டுதல், கூட்டமாகச் சேர்ந்து செல்லுதல், வாகனங்களில் கூட்டமாகச் செல்லுதல் போன்றவற்றுக்கு அடுத்த 2 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுவோர் மீது ஐபிசி 188 பிரிவின்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 32 ஆக அதிகரித்துள்ள நிலையில் அதில் 17 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்பதால், மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 பேர் ஒமைக்ரானால் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் ஒன்றரை வயதுக் குழந்தை, 3 ஆண்கள் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் தான்சானியா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள். மற்ற 4 பேர் நைஜிரியப் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் அவர்களுக்குத் தொற்று உறுதியானது. இந்த 7 பேருமே அறிகுறியில்லாமல் லேசான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை காவல் துணை ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “மும்பை காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 11 மற்றும் 12-ம் தேதிகளில் எந்தவிதமான போராட்டம், பேரணிகள், கூட்டங்கள், வாகன அணிவகுப்பு ஆகியவை நடத்தத் தடை விதிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸால் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், அமராவதி, மாலேகான், நானேதேத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கையாக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version