44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 4-வது நாளான நேற்று இந்திய அணியின் ஆதிக்கம் சற்று தளர்ந்தது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் ஓபன் பிரிவில் 4-வது நாளான நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய ஏ அணியானது பிரான்ஸுடன் மோதியது. வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, கார்னெட் மாத்தியூக்கு எதிரான ஆட்டத்தை 30-வது நகர்த்தலின் போது டிராவில் முடித்தார். இதேபோன்று ஹரிகிருஷ்ணா பென்டலா 52-வது நகர்வின் போது மவுஸார்ட் ஜூல்ஸுக்கு எதிரான ஆட்டத்தையும், விதித் குஜராத்தி 31- வது நகர்வின் போது ஃப்ரெசினெட் லாரன்ட்டுக்கு எதிரான ஆட்டத்தையும் டிராவில் முடித்தனர். எஸ்.எல்.நாராயணனும் 51-வது நகர்வின் போது லகார்டே மோஸ்ட்டுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். இதனால் பிரான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தை இந்திய ஏ அணி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடித்தது.

இந்திய பி அணி இத்தாலியுடன் மோதியது. இதில் இந்தியாவின் சத்வானி ரவுனக், சோனிஸ் பிரான்செஸ்கோவுக்கு எதிரான ஆட்டத்தை 30-வது நகர்த்தலின் போது டிராவில் முடித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய டி.குகேஷ் 34-வது நகர்வின் போது வோக்துரா டேனியலை தோற்கடித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய சரின் நிகில் 51-வது நகர்வின் போது மொரோனி லூகா ஜூனியரை வீழ்த்தினார். ஆர்.பிரக்ஞானந்தா 42-வது நகர்வின் போது லோடிசி லோரென்சோவுக்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதன் மூலம் இத்தாலி அணியை 3-1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது இந்திய பி அணி.

இந்திய சி அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கங்குலி சூர்யா சேகர், ஷிரோவ் அலெக்ஸிக்கு எதிரான ஆட்டத்தை 36-வது நகர்த்தலின் போது டிராவில் முடித்தார். அதேவேளையில் எஸ்.பி.சேதுராமன் 31-வது நகர்த்தலின் போது வல்லேஜோ போன்ஸ் பிரான்சிஸ்கோவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். குப்தா அபிஜீத் 41-வது நகர்வின் போது அன்டன் குய்ஜாரோ டேவிட்டிடம் தோல்வியடைந்தார். கார்த்திகேயன் முரளி, சாண்டோஸ் லதாசா ஜெய்ம் மோதிய ஆட்டம் 52-வது நகர்வில் டிராவில் முடிவடைந்தது. இதனால் ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய சி அணி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது.

மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி ஹங்கேரியை எதிர்த்து விளையாடியது. இதில் நிறைமாத கர்ப்பிணியான இந்தியாவின் ஹரிகா துரோணவல்லி 13-வது நகர்த்தலின் போது காராடிசியாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார்.

இதேபோன்று ஆர்.வைஷாலி 35-வது நகர்வின் போது லாசர்னே வஜ்தா சிடோனியாவுக்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தார். கோனேரு ஹம்பி 48-வது காய் நகர்த்தலின் போது ஹோங் தான் டிராங்கிற்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார்.

தானியா சச்தேவ் 52-வது நகர்வின் போது சோகாவை தோற்கடித்தார். இதன் மூலம் இந்திய ஏ அணி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது.

இந்திய பி அணியானது எஸ்டோனியாவை எதிர்த்து விளையாடியது. இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய இந்தியாவின் வந்திகா அகர்வால் 43-வது நகர்வின்போது மேநர்வாவை வீழ்த்தினார். சவுமியா சாமிநாதன் 43-வது நகர்வின் போது சினிட்சினா அனஸ்தேசியாவுக்கு எதிரான ஆட்டத்தையும், திவ்யா தேஷ்முக் 42-வது நகர்வின் போது சோபியா ப்ளாக்கினுக்கு எதிரான ஆட்டத்தையும் பத்மினி ரவுத் 45-வது நகர்வின் போது ஓல்டே மார்கரெட்டுக்கு எதிரான ஆட்டத்தையும் டிராவில் முடித்தனர். இதன் மூலம் இந்திய பி அணியானது 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் எஸ்டோனியாவை தோற்கடித்தது.

இந்திய சி அணி முதல் 3 சுற்றுகளிலும் வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்றில் ஜார்ஜியாவிடம் 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இந்தியாவின் சாஹிதி வர்ஷினி 12வது நகர்த்தலிலேயே ஜவகிஷ்விலி லேலாவிடம் தோல்வியடைந் தார். இதேபோன்று பிரதியுஷா போதா 41-வது நகர்த்தலின் போது மெலியா சலோமியிடமும், ஈஷா கரவாடே 34-வது நகர்வின் போது ஸாக்நிட்ஸியிடம் வீழ்ந்தனர். ஆறுதல் அளிக்கும் விதமாக பி.வி.நந்திதா 42-வது நகர்வின் போது நினோ பாட்சியாஷ்விலியை தோற்கடித்தார்.

ஓபன் பிரிவில் நார்வே அணி தனது 4வது ஆட்டத்தை மங்கோலியாவுக்கு எதிராக 2-2 என்ற புள்ளிகணக்கில் டிரா செய்தது. உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 30-வது காய் நகர்த்தலின் போது பட்சுரேன் டம்பாசுரேனை வீழ்த்தினார்.

ஓபன் பிரிவில் பதக்கம் வெல்லக்கூடிய அணியாக கருதப்படும் அமெரிக்காவுக்கு 4-வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் அணி கடும் சவால் கொடுத்தது.

இதனால் இந்த ஆட்டத்தை அமெரிக்காவில் 2-2 என்ற கணக்கில் டிரா மட்டுமே செய்ய முடிந்தது. அமெரிக்காவின் முன்னணி வீரரான பேபியானோ கருணாவை, அப்துசட்டோரோவ் நோடிர்பெக் 60-வது நகர்வின் போது தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

`இறுதிச் சுற்று ஆட்டங்கள் கடினமாக இருக்கும்’

ஓபன் பிரிவில் இந்திய பி அணி சார்பில் விளையாடும் கிராண்ட் மாஸ்ட ரான அதிபன் கூறும்போது, “ இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஒரு நாளில் அன் றைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துவோம்.
இறுதிக்கட்ட சுற்று ஆட்டங்கள் கடினமாக இருக்க வாய்ப் புள்ளது. இதை கருத்தில் கொண்டே எங்களது வியூகங்கள் உள்ளன. சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்ற சர்வதேச ஆட்டங்கள் நடை பெறும் போது செஸ்ஸின் வளர்ச்சியை அடுத்த தலைமுறை முன்னெடுத்துச் செல்லும்.

பி அணியில் இளம் வீரர்கள் இருப்பது சிறப்பான விஷயம். இந்த வீரர்களை பொறுத்தவரையில் எந்தவித பயமும் இல்லாமல் விளையாடுகின்றனர். யாராக இருந்தாலும் பயமின்றி எதிர்கொள் கின்றனர். யார் விட்ட சாபம் என்று தெரியவில்லை. 3 சுற்று ஆட்டங்களை முழுமையாக வென்ற நிலையில் இன்று(நேற்று) டிராக்களை சந்தித்துவிட் டோம். இருப்பினும் இது இனிமேல் அழுத்தம் இல்லாமல் விளையாட உதவியாக இருக்கும்” என்றார்.

வெற்றியை வசப்படுத்தியது எப்படி?

இந்திய ஏ அணியின் வீராங்கனையான தானியா சச்தேவ் கூறும்போது, “ஆட்டம் கடினமாக இருந்தது. ஒவ்வொரு அணியும் வலுவாகவே உள்ளன. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினேன். ஆனால் அதன் பின்னர் எதிரணி வீராங்கனை சோகா சில வாய்ப்புகளை உருவாக்கினார். அதை சமாளித்து ஆட்டத்தை ஆழமாக கொண்டு சென்று அவரை வீழ்த்தினேன். எந்த ஆட்டமும் எளிதல்ல. இந்த ஆட்டத்தை பார்க்க எனது பெற்றோர் டெல்லியில் இருந்து வந்திருந்ததாக பயிற்சியாளர் என்னிடம் கூறினார். அது மகிழ்ச்சியை அளித்தது” என்றார்.