வரும் 2024-ம் ஆண்டு ‘ஒரே நாடு.ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கரூரில் நேற்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி பேசியது: தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. ஆட்சியாளர்களின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகிறது. வரும் 2024-ம் ஆண்டு ‘ஒரே நாடு. ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசைதான் உள்ளது. மக்களுக்கு சேவையாற்ற திமுக வரவில்லை.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.
முன்னதாக மதுரையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவைத்து அவர் பேசும்போது, ‘நீட்’தேர்வை பற்றி விவாதிக்க என்னுடைய சவாலை ஏற்று அதிமுகவினர் வருவார்களா? என்று காணொலிக் காட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கேட்டுள்ளார். நிச்சயமாக அவரது சவாலை ஏற்கிறோம். நீட் தேர்வு எந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது? யாருடைய ஆட்சியிலே அது வருவதற்கு நச்சு விதை தமிழகத்தில் ஊன்றப்பட்டது? நானும், ஓ.பன்னீர்செல்வமும் விவாதத்துக்கு வரத் தயார் என்றார்.
2 ஆண்டுகளில் தேர்தல்
திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு நடைபெறஉள்ள தேர்தலுடன், தமிழக சட்டப்பேரவைக்கும் நிச்சயம் தேர்தல் வரும். அடுத்து வரும் தேர்தலில் நாம் ஆட்சியில் அமர அச்சாரமாக இந்தத் தேர்தல் உள்ளது என்றார்.