நாடு முழுவதும் காவல் துறையினரின் சீருடை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தொலைநோக்கு திட்டம் 2047-ஐ அமல்படுத்துவது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு சிந்தனை முகாம் என்ற பெயரில் ஹரியாணாவின் சூரஜ்கண்ட்டில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 2024-க்குள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய பாதுகாப்பு முகமையின்( என்.ஐ.ஏ) கிளைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மாநாட்டின் நிறைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது: “அரசியல் சாசனப்படி சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்றாலும், அது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் சேர்த்து பாதுகாப்பதையுமே குறிக்கிறது.

சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் அமைப்புகள் நம்பகத்தன்மை கொண்டவையாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். அதேபோல், அந்த அமைப்புகள் குறித்த பொதுமக்களின் பார்வையும் மிகவும் முக்கியம். ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களில் இருந்து ஊக்கம் பெற வேண்டும். ஒரு மாநிலத்தின் சிறப்பான நடைமுறையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். இதன்மூலம் எது சிறந்த நடைமுறையோ அது நாடு முழுவதற்கும் இருக்கும். மக்களுக்கு அதிகாரங்களை அளிப்பதில்தான் ஒரு நாட்டின் வலிமை அடங்கி இருக்கிறது. அத்தகைய அரசுதான் சிறந்த அரசு. நாட்டின் கடைக்கோடி மனிதனும் அதிகாரத்தைப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை உள்துறைக்கு இருக்கிறது.

குற்றங்கள் எப்போதும் உள்ளூர் அளவிலானதாக மட்டும் இருப்பதில்லை. பல மாநிலங்கள் தொடர்புடைய, பல நாடுகள் தொடர்புடைய குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. எனவே, மாநிலங்களுக்கு இடையேயும் மத்திய அரசு – மாநில அரசுகளுக்கு இடையேயும் முழுமையான ஒத்துழைப்பு இருக்க வேண்டியது அவசியம். சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. எனவே, தொழில்நுட்பங்களை வலுப்படுத்துவதற்குத் தேவையான நிதி உதவிக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான காவல் சீருடை இருப்பது குறித்து மாநிலங்கள் பரிசீலிக்க வேண்டும்.

தீவிரவாதத்திற்கு எதிராகவும், நிதி மோசடி குற்றங்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போலி செய்திகளை கண்டறிவதற்கான தொழில்நுட்பங்களை நாம் வலுப்படுத்த வேண்டும். ஏனெனில், ஒரு தவறான செய்தி மிகப் பெரிய குழப்பத்தை, பாதிப்பை ஏற்படுத்திவிடும். அனைத்து வகையான நக்ஸல் தீவிரவாதமும் ஒடுக்கப்பட்டுள்ளது. அது துப்பாக்கியுடன் வந்தாலும் அல்லது பேனாவுடன் வந்தாலும் அத்தகைய சக்திகள் இளைஞர்களை தவறாக வழிநடத்த அனுமதித்துவிடக் கூடாது. இன்றைய மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் முதல்வர்கள், 16 மாநிலங்களின் துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.