சென்னை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்ற சங்க நிர்வாகிகள், போதைக்கு எதிராக சங்கரய்யாவின் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டனர்.

அப்போது சங்க நிர்வாகிகளிடம் சங்கரய்யா கூறுகையில், “பிறபிரச்சினைகளை விட மிக முக்கியமான பிரச்சினை போதைப் பழக்கம்தான். மத தலங்களிலும் போதையின் தீமை குறித்துப் போதிக்க வேண்டும். கிராமப்புற கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார். அவரைத் தொடர்ந்து இயக்குநர்கள் வெற்றிமாறன், சசிகுமார் ஆகியோர் போதை ஒழிப்புக்காகக் கையெழுத்திட்டனர்.

பின்னர், திருவல்லிக்கேணியில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் கூறியதாவது:

பெருநகரம் தொடங்கி கிராமப்புறம் வரை குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதைப் பொருள் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் சந்தைக் களமாக இந்தியா இருப்பது வருந்தத்தக்கது.

இதில் மத்திய பாஜக அரசு கவனம் செலுத்தவில்லை. இதனாலேயே குஜராத் மாநிலத்தில் இருக்கும் அதானி துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் இதுவரை வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மட்டும் 11 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. அரசு மதுக்கடைகளின் நேரத்தைக் குறைத்து திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்களை மீட்கும் வகையில் ஆலோசனைக் குழுக்களை அமைக்க வேண்டும். சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒருபோதை மீட்பு மையம் உருவாக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்தைப் பெற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு மனு கொடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.