எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்காமல் இருக்கும் பேரவைத் தலைவருக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்புச் சட்டையணிந்து பேரவைக்கு வந்தனர்.

அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்படும் நிலையில், பழனிசாமி தரப்பினர் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, ஆர்.பி.உதயகுமாரை அப்பதவிக்கு நியமித்து பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தனர். இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பும் கடிதம் அளித்தது. ஆனால், இதுகுறித்து பேரவைத் தலைவர் தனது முடிவை குறிப்புரையாக அளித்தார். இதை ஏற்காத பழனிசாமி தரப்பு கூட்டத்தொடரை புறக்கணித்தது.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில், இருக்கைகள் மாற்றப்படவில்லை. இதனால், பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்திருந்தனர். இதனிடையே, அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின்படி நேற்று (ஜன.10) காலை சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, பேரவைத் தலைவர் மு.அப்பாவுவை, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சந்தித்தனர். அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்துள்ளதை சுட்டிக்காட்டி மீண்டும் வலியுறுத்தினர். அப்போது, ‘நல்லதே நடக்கும்’ என பேரவைத் தலைவர் தெரிவித்ததாக அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்காமல் இருக்கும் பேரவைத் தலைவருக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (ஜன.11) கருப்பு சட்டையுடன் பேரவைக்கு வந்தனர்.