இந்திய – சீன எல்லையை அண்டை நாடு தன்னிச்சையாக மாற்ற நமது ராணுவம் விட்டுவிடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய – சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே நிகழ்ந்த மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், “சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் நமது ராணுவம் தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள யாங்ஸ்டீ என்ற பகுதியிலும் நமது ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது எல்லையை பாதுகாத்து வரும் அவர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்; பாராட்ட வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் சார்ந்த விமர்சனங்களை முன்வைப்பதில் எந்த பிரச்சினையும் எங்களுக்கு (அரசுக்கு) இல்லை. ஆனால், நாம் நமது ராணுவ வீரர்களை அவமதிக்கக் கூடாது. இந்திய – சீன எல்லையை அண்டை நாடு தன்னிச்சையாக மாற்ற நமது ராணுவம் விட்டுவிடாது” என்று தெரிவித்தார்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: முன்னதாக, இன்று மாநிலங்களவை கூடியதும், இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இது குறித்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நாம் அவையில் இது குறித்து விவாதிக்காமல் வேறு எது குறித்து விவாதிக்க வேண்டும்? இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நாம் தயாராக வேண்டும்” என்று வலியுறுத்தினார். எனினும், மாநிலங்களவை தலைவர் இதை ஏற்க மறுத்ததை அடுத்து, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

ராகுல் காந்தி பேட்டி: முன்னதாக, இந்த விவகாரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருவதாகக் குறிப்பிட்டார். இதனை மத்திய அரசு மறைப்பதாகவும், ஏற்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.