கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக பகலவன் பொறுப்பேற்றார்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நீதி வேண்டும் என்ற பெயரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. இதில் 50க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்துள்ளனர். மேலும் பள்ளி கட்டிடங்கள் மற்றும் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டு தீயிட்டு எரித்தனர். இந்த கலவரம் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே மாணவியின் மர்மமான மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு நேற்று முதல் அதன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு அமைக்கப்பட்டு எப்படி கலவரமாக மாறியது, இதில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் இருவரையும் பணியிடை மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஷர்வண்குமார் ஜடாவத் மாற்றப்பட்டார். புதிய காவல் கண்காணிப்பாளராக சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அவர் பொறுப்பேற்றார்.

”சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைதியான சூழலை உருவாக்குவதே முதல் பணியாக இருக்கும்” என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பகலவன் தெரிவித்துள்ளார்.