தமிழகத்தில் ரத்தத்தை எடுத்து ஓவியம் (Blood Art) வரைவதற்கு தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தற்பொழுது இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒரு புதிய கலாச்சாரம் ஒன்று தலைதூக்கியுள்ளது. Blood Art என்று சொல்லக்கூடிய வகையில் ரத்தத்தை எடுத்து ஓவியம் வரைந்து, விரும்புவர்களுக்கு அனுப்புவது. குறிப்பாக காதலன் காதலிக்கு அனுப்புவது, காதலி காதலனுக்கு அனுப்புவது போன்ற பழக்கம் புதியதாக வந்துக்கொண்டிருக்கிறது. Blood Art Centres என்று ஆரம்பித்து அதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ரத்ததானம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது. அந்த ரத்தத்தை வைத்து ஓவியம் வரைவது சரியான அணுகுமுறையல்ல. உடலில் உள்ள ரத்தத்தை எடுக்கும் போது மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின், அதற்கு தேவையான ஊசியினை முறையாக பயன்படுத்தி ரத்தத்தை எடுத்து, பாதுகாப்பார்கள். ஆனால், ஓவியத்திற்காக எடுக்கப்படும் ரத்தம் என்பது முறையாக பாதுகாப்பு இல்லாத ஒன்றாகும். அதோடு மட்டுமல்லாமல் இரத்தம் எடுக்க பயன்படுத்துகின்ற ஊசி எத்தனை பேருக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது.

எனவே, விதிமுறைகளின்படி இந்த ரத்தம் எடுக்காத நிலையில் அந்த ரத்தத்தை படம் வரைவதற்கு கையாளும்பொழுது, அந்த ரத்தம் எச்.ஐ.வி போன்ற நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்டால் அது பலரை தாக்கி, பாதிப்பிற்குள்ளாக்கும். எனவே, இந்த தகவல் தெரிந்தவுடன் நேற்றைக்கு சென்னையில், வடபழனி மற்றும் தியாகராயநகர் பகுதியில் இருக்கின்ற Blood Art நிறுவனங்களை நமது மருத்துவத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். அங்கிருந்து அதற்காக பயன்படுத்தப்படுகின்ற ரத்த குப்பிகள், ஊசி, வரைந்து வைத்திருந்த படங்களை எல்லாம் பறிமுதல் செய்து, அவர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. இதோடு இந்த தொழிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் நிறுவனம் அல்லது கடைகளுக்கு சீல் வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் ரத்த ஓவியம் (Blood Art) வரைகின்ற அந்த பணியை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஓவியத்தை வரைவதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றது, ரத்தத்தை எடுத்துதான் வரைய வேண்டும் என்றில்லை. ரத்தம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது. எனவே இந்த Blood Art நிறுவனங்களுக்கு இன்று முதல் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்படுகிறது. இதை யாராவது மீறினால் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இளைஞர்கள் இந்த ரத்த ஒவியத்தின் மீது ஆர்வம் காட்டக்கூடாது, மேலும் இதை வரையும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. அன்பை பரிமாறிக் கொள்வதற்கு, நட்பை வெளிப்படுத்திக்கொள்வதற்கு, காதலை வெளிபடுத்துவதற்கு ஏராளமான வழிகள் உள்ளது, ரத்த ஓவியம் வரைந்துதான் அதனை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை” என்று அமைச்சர் கூறினார்.