பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் அவலச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.150, ஒரு கிலோ அரிசி ரூ.165, ஒரு கிலோ மைதா ரூ.135, ஒரு கிலோ பருப்பு ரூ.180, ஒரு கிலோ டீ தூள் ரூ.1100, ஒரு கிலோ சக்கரை ரூ.86, ஒரு லிட்டர் பால் ரூ.140, ஒரு லிட்டர் தயிர் ரூ.115, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ரூ.480, ஒரு கிலோ மாட்டிறைச்சி ரூ.500, ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.1100, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.370, ஒரு டசன் முட்டைகள் ரூ.400… பாகிஸ்தானின் அத்தியாவசியப் பொருட்களுக்கான இன்றைய விலை இவை.

உணவுப் பொருள் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதற்கேற்ப விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களின் வாழ்க்கைத் தரம் சரிந்து கொண்டே வருகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபவர் பக்துன்வா என எல்லா மாகாணங்களிலும் மக்கள் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. இதனால், பொது இடங்களில் விநியோகிக்கப்படும் இலவச உணவுகளைப் பெறுவதற்காக மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அந்த நாட்டின் கோர காட்சிகளை வெளிப்படுத்தி வருகிறது