தளி அருகே ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில், ஊராட்சி செயலர் உட்பட 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே பி.பி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (46). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், தாரவேந்திரம் ஊராட்சித் தலைவராக இருந்தார்.

கடந்த 2-ம் தேதி தளி கொத்தனூரில் இருந்து பி.பி.பாளையம் கிராமத்துக்கு நரசிம்மமூர்த்தி சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து மர்ம கும்பல் கொலை செய்தது.

இக்கொலை தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில் கடந்த 3-ம் தேதி, தாரவேந்திரம் ஊராட்சி துணைத் தலைவி சாக்கம்மாவின் மகன் ரவி (எ) திம்மையா (38), பெரிய மல்லசோனையைச் சேர்ந்த கரியன் (எ) சிவமல்லையா (27) ஆகியோர் சரண் அடைந்தனர். தனிப்படை போலீஸார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

வன்கொடுமை சட்டம்

இந்நிலையில் இக்கொலை வழக்கில் ரவியின் தம்பிகளான கிருஷ்ணன் (36), சங்கரப்பா (எ) சங்கர் (30), மாதேஷ் (29) மற்றும் காலேநட்டியைச் சேர்ந்த தாரவேந்திரம் ஊராட்சி செயலாளர் பிரசன்னா (48), பெரிய மல்லசோனையைச் சேர்ந்த புட்டமாரி (31), தளி கொத்தனூரைச் சேர்ந்த மல்லேஷ் (25), பி.பி.பாளையம் தியாகு (எ) தியாகராஜ் (22), கக்கதாசத்தை சேர்ந்த ராகேஷ் (21), முனிராஜ் (25) ஆகிய 9 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பணப்பிரச்சினை

இக்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் கூறுகையில், ரவி குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தை, கொலையான நரசிம்மமூர்த்தி இடைத்தரகராக செயல்பட்டு தனியார் நிறுவனத்துக்கு விற்றுக் கொடுத்தார்.

ஆனால், அதற்கான பணத்தை ரவி குடும்பத்துக்கு சரியாக கொடுக்கவில்லை. பணம் கிடைக்காமல் தவித்து வந்த ரவியின் தந்தையும் சமீபத்தில் உயிரிழந்தார். பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த ரவி மற்றும் அவரது தம்பிகள் ஒன்றாக சேர்ந்து ஊராட்சித் தலைவர் நரசிம்மமூர்த்தியை கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.