டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

10 மீ ஏர் ரைபில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அவனி லெக்ரா 249.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிலிருந்து பெண் வீராங்கனை ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று இரினா ஷ்செட்னிக்கின் உலக சாதனையை லெக்ரா சமன் செய்துள்ளார்.

இவரையடுத்து சீனா வீராங்கனை 248.9 புள்ளிகளும், உக்ரைன் வீராங்கனை 227.5 புள்ளிகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தினை பிடித்துள்ளனர். லெக்ரா பாரா ஒலிம்பிக்கில் நான்காவது தங்கம் பெறும் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 1972 ல் நீச்சல் வீரர் முரளிகாந்த் பெட்கர், 2004 மற்றும் 2016ல் ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா மற்றும் 2016ல் உயரம் தாண்டுதலில் தங்கவேலு மாரியப்பன் ஆகியோர் இதுவரை தங்கம் வென்றுள்ளனர். இந்த பட்டியலில் முதன் முறையாக பெண் ஒருவர் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

தற்போது இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 34வது இடத்தில் உள்ளது.