டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் மணிஷ் நார்வால் தங்கப் பதக்கத்தை வென்றார். சிங்ராஜ் அதானா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவுக்கு இதுவரை 14 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
டோக்கியாவில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடந்த பி4 மிக்டு 50எம் பிஸ்டல் எஸ்ஹெச்1 போட்டிகள் நடந்தன.
முதல் முறையாக பாராலிம்பிக்ஸிற்கு தகுதி பெற்று 19 வயதான மணிஷ் நார்வால் 218.2 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
பி1 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் செவ்வாய்க்கிழமை வெண்கலம் வென்ற சிங்ராஜ் அதனா, இந்தப் போட்டியில் 216.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். பாராலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களான அவானி லேஹரா, ஜோகிந்தர் சிங் சோதி ஆகியோரின் பட்டியலில் அதானாவும் இணைந்தார்.
ரஷ்ய வீரர் செர்ஜி மல்யஷேவ் 196.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
50எம் பிஸ்டல் பிரிவில் தொடக்கத்திலிருந்தே இந்திய வீரர்கள் மணிஷ் நார்வால், சிங்ராஜ் அதானா இருவருக்கும் இடையே கடும் போட்டி இருந்து. தகுதிச்சுற்றில் 7-வது இடத்தில்தான் மணிஷ் நார்வால் தகுதி பெற்றார். ஆனால், முதல் 10 ஷாட்களில் அதானா 92.1 புள்ளிகளைப் பெற்றார். மணிஷ் 87.2 புள்ளிகளுடனே இருந்தார்.
18-வது ஷாட்களில் மணிஷ் 4-வது இடத்துக்குச் சரிந்தார். ஆனால், 19 மற்றும் 20-வது ஷாட்களில் மணிஷ் சிறப்பாகச் செயல்பட்டு 10.5,10.8 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.