சென்னை: ”சென்னை கண்ணப்பர் திடல் அருகில் கைவிடப்பட்ட காப்பகத்தில் 21 ஆண்டுகளாகக் குடியிருக்கும் தங்களுக்கு வீடு ஒதுக்கக் கோரி, மாநகராட்சி ரிப்பன் மாளிகையை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

சென்னை மாநகராட்சி ரிப்பன்மாளிகையின் மேற்கு பகுதியில்உள்ள ராஜா முத்தையா சாலையோரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 68 குடும்பங்கள் வசித்து வந்தன.

கைவிடப்பட்ட காப்பகம்

இக்குடும்பங்கள் கடந்த 2002-ம்ஆண்டு அகற்றப்பட்டு, மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம், சூளை, கண்ணப்பர் திடல் அருகில்உள்ள மாநகராட்சியின் கைவிடப்பட்ட வீடற்றோர் காப்பகத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர்.

கடந்த 21 ஆண்டுகளில் அக்குடும்பங்கள் 108 குடும்பங்களாகப் பெருகிவிட்டன. இதனால் அவர்கள் தங்கும் இடத்தில் இடநெருக்கடி ஏற்பட்டது. இது தொடர்பாக கடந்தஆண்டு ‘இந்து தமிழ் திசை’யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு செய்ததில், அங்கு வசித்து வந்த உண்மையான 108 பயனாளி குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன.

பின்னர் அவர்களின் பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்த மாநகராட்சி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு ஒதுக்குமாறு, அவ்வாரியத்துக்கு கடிதம் அனுப்பியது.

மாநகராட்சி நிதி வரவில்லை

இது தொடர்பாக வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் கேட்டபோது, “மாநகராட்சி சார்பில் வர வேண்டிய நிதி தங்களுக்கு வரவில்லை” எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், விரைவாக வீடு ஒதுக்க வலியுறுத்தி ரிப்பன் மாளிகையை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு, `ஆணையரை சந்திக்காமல் அங்கிருந்து செல்ல மாட்டோம்’ என கோஷமிட்டனர். பின்னர், அங்கு வந்த போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.