சென்னை: “பிளாஸ்டிக் எந்தளவுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதை மக்கள் உணர்ந்தால், அதை பயன்படுத்த மாட்டார்கள்” என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தென்னிந்தியாவில் முதன்முறையாக பின்னோக்கி நடந்து செல்லும் மாரத்தான் போட்டி,சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த போட்டியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மஞ்சள்பை குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது: ” தமிழர்களின் மரபுபடி, வீடுகளில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலமிட்டால், புழு பூச்சிகள் அண்டாது. அரிசி மாவினால் இடுகின்ற கோலம் என்பது, அந்த கோலத்தில் அழகும் இருக்கும். அதேநேரத்தில், எறும்பு போன்ற உயிரினங்களுக்கு உணவாகவும் அந்த அரிசி மாவு பயன்படும். ஆனால் தற்காலத்தில் அதற்கு பதிலாக சாணிப்பவுடரை வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.

சாணிப் பவுடரை தெளிப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அறியாமல், அதை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்கின்றனர். ஆனால், அது தற்கொலை முயற்சி மேற்கொள்வதற்கான ஒரு மூலப்பொருளாகவே இன்றைக்கு மாறியுள்ளது. பிளாஸ்டிக் எந்தளவுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதை மக்கள் உணர்ந்தால், அதை பயன்படுத்தமாட்டார்கள்” என்று அவர் கூறினார்.