திண்டுக்கல்: பெரியார், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், அப்துல்கலாம் ஆகியோரை படியுங்கள், இதற்கு மேல் வேறு ஒன்றும் தேவையில்லை என நடிகர் சத்யராஜ் பேசினார்.

திண்டுக்கல் ஜி.டி.என். கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. கல்லூரித் தாளாளர் கே.ரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் ஆர்.துரைரத்தினம் முன்னிலை வகித்தார்.

விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது:

இந்த அரங்கத்துக்கு அப்துல்கலாம் அரங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. நீங்கள் அப்துல்கலாம், தந்தை பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்சை படியுங்கள். இதற்கு மேல் வேறு என்ன வேண்டியிருக்கிறது. நான் எப்போதும் இளைஞர்களிடம் இருந்து ஆலோசனை பெற ஆசைப்படுவேன். பெரியவர்களிடமிருந்து கற்கவும், இளைஞர் களிடமிருந்து கற்கவும் நிறைய உள்ளன.

எம்.ஜி.ஆர், சிவாஜியிடம் கற்றுக் கொள்ள எவ்வளவு விஷயம் இருந்ததோ, அதுபோல அன்பு தம்பிகள் விஜய், அஜீத், சூர்யாவிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் என எந்த சமூக வலைதளத்திலும் நான் இல்லை.

இளைஞர்களாகிய நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.