வார இறுதிநாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, விஜயதசமியன்று பெரும்பாலான பக்தர்கள் கோயில்களில் தரிசனம் செய்தனர். மேலும் கோயில்களில் குழந்தைகளுக்கான ‘வித்யாரம்பம்’ நிகழ்வுகளும் நடைபெற்றன.

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் பல கட்டங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கரோனா 2-ம் அலையைத் தொடர்ந்து, பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஆண்டு, அக். 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கூட்டம் சேருவதை தடுக்கும்விதமாக, வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை முதல்வர் மு.க..ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதியளிக்கப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து, இதன் அடிப்படையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, வெள்ளிக்கிழமையான நேற்று கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

நேற்று விஜயதசமி என்பதால் சிறு குழந்தைகளுக்கான ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி ராஜாஅண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு நின்று தரிசனம் செய்தனர். தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டிருந்த வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்யப்படவில்லை. கோயில் வளாகத்தில் அமர அனுமதியில்லாததால் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு உடனடியாக பக்தர்கள் கோயிலில் இருந்து வெளியே சென்றனர்.

இதே போல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உட்பட சென்னையில் உள்ள பெரும்பாலான கோயில்களில் பக்தர்கள் நேற்று நாள் முழுவதும் சுவாமி தரிசனம் செய்தனர்.

விஜயதசமியை முன்னிட்டு சிறு குழந்தைகளுக்கான ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி ராஜாஅண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நேற்று நடைபெற்றது.