“இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் மாநாடு நடத்த அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தெய்வநாயகம் தாக்கல் செய்துள்ள வழக்கில், “இந்து ராஷ்ட்ரா என்ற பெயரில் புதிய வரைவு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவது குறித்து ஆர்எஸ்எஸ் திட்டமிடுவதாக செய்தி வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் எவ்வித பங்கையும் அளிக்காத ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்து மக்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கும் வகையிலும், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தினரின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் வரைவு அரசியலமைப்பை உருவாக்கி இருக்கிறது. மத சார்பின்மை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையிலும், யாரும் ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடனும் ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் “கபாலீஸ்வரர் கோவிலின் கல்வெட்டிலிருந்து இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் மாநாடு நடத்த அரங்கம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்ள இருக்கிறார். கூட்டத்திற்கு தமிழக அரசிடம் அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது. எனவே எனது மனுவை பரிசீலித்து, மாநாட்டிற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.