முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது, பெட்ரோல் விலை உயர்வு குறித்து நிதியமைச்சர் பேசியதாவது:

“தமிழகத்தில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவைதான் எளிய உழைக்கும் வர்க்கத்தினர் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து முறை. இவர்கள் பெட்ரோல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை அதிகரித்து, மாநிலங்களுக்கு பகிர்ந்து கொள்ளாமல் மத்திய அரசே பெருமளவு பயன்பெற்றதால், பெட்ரோலின் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவுக்குக் குறைக்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இது மாநிலத்தில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கும் நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்”.

இவ்வாறு அவர் பேசினார்.