மருத்துவர்களின் கவனக்குறைவால் மரணம் அடைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று (நவ.15) காலை உயிரிழந்த கால்பந்து வீராங்கனை மாணவி பிரியாவின் (17வயது) குடும்பத்தினரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு ரத்த ஓட்டம் பாதித்ததால் ரத்த நாளங்கள் பழுதாகி உள்ளது. மேல் சிகிச்சைக்காக கடந்த 10 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். நேற்று முன்தினம் நேரடியாக வந்து பார்த்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தேன். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் எலும்பு சிகிச்சை நிபுணர், மூட்டு நிபுணர், மயக்கவியல் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சை இருந்த போதும் இன்று காலை மாணவி பிரியா உயிரிழந்தார்.

உடனடியாக மருத்துவ வல்லுனர் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க செய்தோம். பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவும் காரணம் என்று தெரிந்தது. கவனக்குறைவுடன் மாணவி பிரியாவுக்கு சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இரு மருத்துவர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும். 2 மருத்துவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கவல்துறை நடவடிக்கைக்கு புகார் அளிக்கப்படும்.

தமிழ்நாடு அரசு சார்பில் பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். மாணவி பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் காயம் எவ்வாறு உள்ளது என்பதை பரிசோதனை செய்த போது, காயம் மேலும் அதிகரித்திருப்பதும், தசை வளர்ந்திருப்பதும் கண்டறியப்பட்டது. அதனால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு உறுப்புகளும் பாதிக்கப்பட்டது. கல்லீரல் செயல் இழந்து, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து, டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு சென்றார். அதனால் இரவு முழுவதும் டயாலிசிஸ் செய்யப்பட்டது.

மாணவி பிரியா முதலில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தபோது வீடு அருகில் என்பதால் பெரியார் நகர் மருத்துவமனைக்கு மாற்றினார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் துறை ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர் குழு விசாரணையும் தொடர்ந்து நடைபெறும்” இவ்வாறு அமைச்சர் கூறினார்.