விஜய் ஆண்டனி இயக்கி, நடிக்கும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. அவரே தயாரித்து, இசையமைத்திருந்தார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் பணிகளை கரோனா ஊரடங்கு சமயத்தில் தொடங்கினார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியதோடு இயக்குநராகவும் அறிமுகமாகிறார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் பல்வேறு முன்னணித் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கலந்துகொண்டு விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.