பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஒருசில மாநிலங்கள் ஒரு படி மேலே சென்று, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளன. தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் (தடிமன் வரைமுறையின்றி) மீதான தடை, 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலில் உள்ளது.
இதனிடையே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், திருத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளை (2021) வெளியிட்டுள்ளது. அதில், 75 மைக்ரான் தடிமனுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பைகள், ஒரு சதுர மீட்டர் அளவில் 60 கிராம் (GSM) வரை உள்ள நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகளை செப்.30-ம் தேதி முதல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும், 100 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2022-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
75 மைக்ரான் தடிமனுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பைகள், 60 ஜிஎஸ்எம் வரை உள்ள நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செப்.30-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதை தமிழகத்தில் செயல்படுத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி சார்பில் அண்மையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, இதுதொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏற்கெனவே 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ளபிளாஸ்டிக் மீதான தடையை, அரசுகொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிட்டிருப்பது உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மீது உரிய தீர்வுகாணப்படுமா என சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒருவரும் பதில் அளிக்கவில்லை.