உங்களின் முதலீடு அப்படியே இரட்டிப்பாகி உங்களுக்கு முதிர்வு தொகையாக கிடைக்கும்

பாதுகாப்பான அஞ்சல் சேமிப்பு கணக்குகளில் நினைத்ததை விட டபுள் மடங்கு லாபம் தரக்கூடிய திட்டங்கள் இருக்கு.. உங்களுக்கு தெரியுமா?

பணத்தை சேமிக்க வேண்டும், நல்ல முதலீடு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு அஞ்சல் சேமிப்பு ஒரு நல்ல தேர்வாகும். பணத்திற்கு பாதுகாப்பு, நல்ல வட்டி, கூடவே வரிச்சலுகை என வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் ஏகப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீடு திட்டங்கள் அஞ்சலகத்தில் உள்ளது. அதுக் குறித்து தான் பார்க்க போகிறோம். முதலில் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் குறித்து பார்ப்போம்.இந்த டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்சமான வட்டி விகிதம் 6.7% ஆகும்.

இந்த திட்டத்தில் 1, 2, 3, 5 வருடங்கள் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். குறிப்பாக வாடிக்கையாளர்கள் 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வரி விலக்கு உண்டு. குறைந்தபட்சம் டெபாசிட் ரூ. 1000 முதல் தொடங்குகிறது. அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. முதலீட்டாளர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையில் சலுகை வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பின்பு உங்களின் முதலீடு அப்படியே இரட்டிப்பாகி உங்களுக்கு முதிர்வு தொகையாக கிடைக்கும். அடுத்தது, போஸ்ட் ஆஃபிஸில் இருக்கும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம்.

இந்த திட்டத்தில், 6.8% வட்டியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10.7 ஆண்டுகளில் உங்களது முதலீடு இருமடங்காகும். மிகவும் பாதுகாப்பான முதலீடு திட்டமாகவும் இந்த தேசிய சேமிப்பு பத்திர திட்டம் பார்க்கப்படுகிறது.

இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாக செயல்பட்டு வருகிறது. அதே நேரம், தேசிய சேமிப்பு பத்திரம் முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடு திட்டம் ஆகும். அடுத்தது தொடர் வைப்பு நிதி. இந்த திட்டத்தில் வைப்பு கணக்கிற்கு 5.8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் இந்த திட்டத்தில் முதலீடு செய்த பின்பு சரியாக 12 வருடம் 5 மாதங்களில் அவர்களின் முதலீடு இருமடங்காக மாறும். அதே போல் பாதுகாப்பான முதலீடு திட்டமாகும்.