Bigg Boss Tamil 5 Day 5 Review : பிக் பாஸ் நமீதாவை தேர்வு செய்தது மிக சரியான முடிவு என அந்த தருணம் எல்லோருக்கும் புரிய வைத்துவிட்டது.

ஒட்டு மொத்த திருநங்கைகளின் அவல குரலாக பிக் பாஸ் இல்லத்தில் நமீதா மாரிமுத்துவின் குரல் ஒலித்தது.

ஐந்தாம் நாள் காலை “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் இருந்து பாடல் ஒலித்தது. வழக்கம் போல் இமான் அண்ணாச்சி காலை உதைத்து கொண்டிருந்தார். சட்டு புட்டுன்னு எல்லோரும் குளிச்சிட்டு சாப்பிட போனாங்க. திடீரென்று அபிஷேக் குடும்பி போட்டு வந்து நின்றார். அதாங்க டாப் நாட். வீட்டில் அம்மா கிட்ட பண்ண முடியாத எல்லாத்தையும் சின்ன பொண்ணு மூலம் நிறைவேற்றி கொள்கிறார். பய பக்தியாக அவரின் காலில் விழுந்து திருநீர் வைத்து கொள்கிறார். சினிமா பையன் அவ்வளவு நல்ல பையன் இல்லையே அப்புறம் எப்படி இதெல்லாம்னு தெரியல. அப்படியே பவானி ரெட்டி வயசு பற்றியும் ஸ்கூல் பசங்க லவ் லட்டர் கொடுக்க கூடாதுன்னும் அட்வைஸ் பண்ணிகிட்டு இருந்தார். (நாங்க கொடுக்க மாட்டோம் நீ கொடுக்காம இருந்தா சரி).

கதை சொல்லுட்டுமா டாஸ்க் ஆரம்பமானது. நமீதா திருநங்கையாக மாறுவதற்கு முன்பு அவரின் வாழ்க்கையில் நடந்த போராட்டங்களை கண்ணீருடன் பதிவு செய்து கொண்டிருந்தார். வீட்டில் ஒரே ஒரு ஆண் வாரிசாக பிரிந்து, நல்ல உணவு, உடை, என பாசமாக செல்லமாக வளர்க்கப்பட்டு 8 வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் இன்று நமீதா மாரிமுத்துவாக பிக் பாஸில் நிற்கிறார். ஆனால் அவ்வளவு எளிமையாக அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. வலி, வேதனை, அடி என திருநங்கை வாழ்க்கை எப்படி பட்டது என கண்ணீருடன் விவரித்தார். நமக்கும் கண்ணீரை அடக்க முடியவில்லை. 4 முறை வீட்டை விட்டு ஓடி, அடியாட்களை வைத்து கொலை மிரட்டல், சிறை கைதி, மார்பக ஆப்ரேஷன் குடும்பத்தில் இருந்தவர்கள் நமீதாவுக்கு இழைத்த அந்நீதி அனைத்தையும் கொட்டி தீர்த்தார். எப்படி உடல் குறைபாடு ஒரு குறையோ, அதுபோல் தான் எங்களின் மாற்றமும் ஒரு குறைபாடு என அவர் சொல்லிய விதம் யோசிக்க வைத்தது.

படிப்பு மட்டுமே வாழ்வை உயர்த்தும் என்பதில் உறுதியாக இருக்கும் நமீதா, அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த தவறவில்லை. திருநங்கைகள் ஏன் தவறான வழிக்கு போகிறார்கள், அவர்கள் வாழ்க்கை மாற யார் காரணம்? பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நமீதா சொன்ன அத்தனை விஷயங்களும் இந்த சமூகத்திற்கு அவசியமான ஒன்று. இது குறித்த புரிதல்கள் இல்லாதவர்கள் கூட இதைப் பற்றி பேச, சிந்திக்க ஒரு பாதயை போட்டு தந்துவிட்டார் நமீதா. அவரின் வெற்றியே இப்போது சிகரம் தொட்டு இருக்கும் பிக் பாஸ் என பாடல் வரியில் நமீதா சொன்னது நூறு சதவீதம் உண்மை. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டாலும் தாய் தந்தை துணை நின்றால் போதும் எந்த திருநங்கைகளும் ரோட்டில் நிற்க மாட்டார்கள் என முடித்தார் நமீதா. அரங்கமே எழுந்து நின்று நமீதாவுக்கு சல்யூட் செய்தது. பிக் பாஸ் நமீதாவை தேர்வு செய்தது மிக சரியான முடிவு என அந்த தருணம் எல்லோருக்கும் புரிய வைத்துவிட்டது.

அபிசேஷ் ராஜுக்கு தலை மசாஜ் செய்து கொண்டிருந்தார் செல்ல அக்கா பவானி. அதை ராஜூ பாய் கலாய்க்க, உடனே ஆக்‌ஷன் மோடுக்கு மாறினார் அண்ணாச்சி. ராஜூ – ஐக்கியை வைத்து செருப்பு பருப்பு கதையை ஷூட் செய்து கொண்டிருந்தார். ஹவுஸ்மேட்ஸ் அதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த பக்கம், பிரியங்கா மேக்கப் போடுவதை தாமரை செல்வி ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தார். அதை வாய்விட்டு கேட்டுவிட்டார். “ஒரு நாளாவது எனக்கு மேக்கப் போட்டு விட்டு இருக்கீங்களா”ன்னு அதுக்கு போற போக்குல கமலஹாசன் எபிசோடில் பார்த்துக்கலாம் என்றார் பிரியங்கா.