பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற ‘நீட்ஸ்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (நீட்ஸ்) கீழ் படித்த முதல் தலைமுறை இளைஞர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீட்டுத் தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களைத் தொடங்கலாம். இதற்கென தமிழக அரசு 25 சதவீதம் மானியத்தில் அதிகபட்சமாக ரூ.75 லட்சம், 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் வழங்குகிறது. தகுதியுள்ள பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி தொழில் முனைவோருக்கு 10 சதவீத கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் 21 வயதுபூர்த்தியடைந்திருக்க வேண்டும்.அதிகபட்ச வயது பொதுப்பிரி வினருக்கு 35 வயதாகவும், சிறப்பு பிரிவினருக்கு (மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள்) 45 வயதாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும் பங்களிப்பு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வருமான வரம்பு எதுவும் கிடையாது. புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். அரசு திட்டங்களின் கீழ் ஏற்கெனவே மானியத்துடன் கூடிய கடன் பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற இயலாது. வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகிய நிதி நிறுவனங்களிடமிருந்து தொழில் கடன் பெற்று திருப்பி செலுத்தாதவராக இருத்தல் கூடாது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.