மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இனி பிளஸ் 2 மதிப்பெண் மட்டுமே போதாது சியுஇடி (CUET) எனப்படும் சென்ட்ரல் யுனிவர்சிட்டி எலிஜிபிளிட்டி டெஸ்ட் எழுதித் தேர்வாக வேண்டும் என்று யுஜிசி சேர்மன் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் 12 ஆம் வகுப்பு NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த யுஜிசி சேர்மன் ஜெகதீஷ் குமார், 2022 23 கல்வியாண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை மத்திய பல்கலைக்கழகங்களில் மாணாக்கர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தும். இளநிலை, முதுநிலை படிப்புகள் அனைத்திற்குமே நுழைவுத் தேர்வு நடத்தப்படும். பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசியின்) கீழ் நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்திலும் தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் 12 ஆம் வகுப்பு NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும். Section 1A, Section 1B, பொதுத் தேர்வு மற்றும் பாடப்பிரிவு சார்ந்த தேர்வு என நுழைவுத் தேர்வு வடிவமைக்கப்படும்.

Section 1Aவில் ஆங்கிலம், இந்தி, அசாமி, வங்காளம், குஜராத்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது மொழிகள் இருக்கும். Section 1B என்பது ஆப்ஷனல் தேர்வு. பிற மொழிகளை கற்க விரும்பும் மாணவர்களுக்கான ஆப்ஷன் அது. இதன் கீழ் மாணவர்கள் பிரெஞ்சு, அரபி, ஜெர்மன் போன்ற மொழிப்பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம்.

டொமைன் ஸ்பெசிப் எனப்படும் குறிப்பிட்ட பாடவாரியான ஆப்ஷனில் மாணவர்கள் குறைந்தது 6 பாடங்களை தேர்வு செய்யலாம். அதாவது அவர்கள் இளநிலையில் படிக்க விரும்பும் ஏதேனும் 6 பாடங்களை தேர்வு செய்யலாம். இந்தத் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டு இதில் வரும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர முடியும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மதிப்பெண் கட் ஆஃப் நிர்ணயிக்கப்படும். ஆகவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த பின்னடைவும் வராது. மேலும், இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் பொது கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

சியுஇடி தேர்வால், அனைத்து கல்வி வாரியங்களிலும் பயிலும் மாணவர்களுக்கும், வடகிழக்கு மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் சமவாய்ப்பு கிடைக்கும். சியுஇடி மத்திப்பெண்ணை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதுநிலை பட்டப்படிப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே நிறைய பல்கலைக்கழகங்கள் தனிப்பட்ட முறையில் நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. இனி அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுமே சியுஇடி நுழைவுத் தேர்வு முறையைப் பின்பற்றும் என நம்புகிறோம் என்று கூறினார்.