அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கண்டுகொள்ளவே இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தலைநகர் ஷிம்லாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே உரை நிகழ்த்தினார். அவரது உரை விவரம்: “இமாச்சல பிரதேச மக்களுக்கு நாங்கள் 10 வாக்குறுதிகளை அளித்துள்ளோம். அதன்படி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், இமாச்சல பிரதேச விவசாயிகள் வாங்கியுள்ள வங்கிக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாங்கள் விவசாயிகளின் 72 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தோம் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதேபோல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை உற்பத்தி செய்யும் தோட்ட உரிமையாளர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பழங்களுக்கு நிர்ணயிக்கும் விலையை குறைந்தபட்ச கொள்முதல் விலையாக அரசு அறிவிக்கும். மேலும், காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் முதலில் ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை’ அமல்படுத்துவோம்.

காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக என்ன செய்தது என்று கேள்வி கேட்பதையே பாஜக வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே பல்வேறு அடிப்படை வசதிகளை காங்கிரஸ் செய்திருக்கிறது. மின் இணைப்பு, சாலைகள், கல்லூரிகள் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நாங்கள் இமாச்சல பிரதேசத்தில் நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக பாஜக இமாச்சல பிரதேசத்திற்கு என்ன செய்தது?

நாடு முழுவதும் 14 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 14 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், பிரதமர் மோடி வெறும் 70-75 ஆயிரம் சான்றிதழ்களை மட்டும் விநியோகித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 65 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாட்டின் இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால், கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் அலைந்திருக்க மாட்டார்கள். நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கண்டுகொள்ளவேயில்லை.

வெளிப்படையான தேர்தல் முறை மூலம் ஜனநாயக முறைப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் பாஜக தலைவராக ஜே.பி. நட்டா எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அவர்கள் காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்கள்” என்று அவர் பேசினார்.