போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிப்பதில், மனிதாபிமான அடிப்படையில் போலீஸார் நடந்து கொள்கின்றனர், என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

சேலம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நேற்று வந்திருந்தார். அங்கு காவல் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா, சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்ரீஅபிநவ் (சேலம்), சாய்சரண் தேஜஸ்வி (நாமக்கல்), கலைச்செல்வன் (தருமபுரி), சரோஜ்குமார் தாகூர் (கிருஷ்ணகிரி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, கொள்ளை, திருட்டு வழக்குகளில் சேலம் மாநகர மற்றும் சேலம் காவல் சரக போலீஸாரால், மீட்கப்பட்ட 180 பவுன் நகைகள், 15 கிலோ வெள்ளி, ரூ.70 லட்சம் ரொக்கம், 124 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள், 175 செல்போன்கள் ஆகியவற்றை பார்வையிட்டு, வழக்கில் பாதிக்கப்பட்டவர்களிடம் நகை, செல்போன் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது: சேலம் மாநகரில் 2021-ம் ஆண்டு 24 கொலை வழக்குகள், நடப்பாண்டில் 14 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனடிப்படையில், மாநகரில் கொலை சம்பவம் 42 சதவீதம் குறைந்துள்ளது. சேலம் சரகத்தில் 2021-ம் ஆண்டில் 147 கொலை வழக்குகள், நடப்பாண்டில் 125 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, சரகத்தில் கொலை சம்பவங்கள் 15 சதவீதமாக குறைந்துள்ளன.

சங்ககிரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கொள்ளை போன 150 சவரன் நகைகளை, இன்ஸ்பெக்டர் தேவி மத்திய பிரதேசம் சென்று மீட்டு வந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் 30 கிராமங்கள் உள்பட சேலம் சரகத்தில் 120 கிராமங்கள் போதைப் பொருள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம் விரைவில் கஞ்சா இல்லாத மாவட்டமாக மாறும். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிப்பது தொடர்பாக மாற்றுக் கருத்துகள் வந்துள்ளன. அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், வாகனத்தை சாகசமாக ஓட்டுபவர்களிடம், புதிய அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராதம் விதிப்பதில் போலீஸார் மனிதாபிமான அடிப்படையில் தான் செயல்படுகின்றனர், என்றார்.

பறிமுதல் துப்பாக்கிகள் ஆய்வு: சேலம் மாநகர காவல்துறையில் செயல்பட்டு வரும் அதிவிரைவுப் படை போலீஸாரின் செயல்பாட்டை சோதிக்கும் வகையில், கவச உடையணிந்த காவலர்களில் ஒருவரை, தாக்குவது போல தள்ளி, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சோதித்துப் பார்த்தார். அப்போது, ஒருவர் தாக்க வரும்போது, லத்தியை உயர்த்த வேண்டும் என்றார். மேலும், தடய அறிவியல் ஆய்வுக்கூடத்தையும் அவர் பார்வையிட்டார். போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகளை சுடுவது போல வானத்தை நோக்கி தூக்கி, அவற்றை பரிசோதித்தார்.