பழைய வாகனங்களை உபயோகத்தில் இருந்து நீக்கும் கொள்கையை பிரதமர்நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். தானியங்கி அடிப்படையிலான இந்த கொள்கை முடிவு நேற்று குஜராத்தில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிடப்பட்டது. இம்மாநாட்டை காணொலி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்.

பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் (ஸ்கிராப்) வெளிநாட்டிலிருந்து அதிக அளவில் இரும்பு இறக்குமதி மற்றும் மூலப் பொருள் இறக்குமதி செய்வது குறையும். மேலும் பழைய வாகனங்களை உபயோகத்திலிருந்து நீக்குவதன் மூலம் சுற்றுச் சூழல் மாசு குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது.

பழைய வாகனங்களை அழிப்பதை செயல்படுத்துவதன் மூலம் ரூ. 10 ஆயிரம்கோடி முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும். தனியார் வாகனங்களுக்கு இதை நடைமுறைப்படுத்துவது 2024-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும். குஜராத் மாநிலம் அலாங் பகுதியில் வாகனங்களை அழிக்கும் மையம் உருவாக்கப்பட்டு அது நாட்டின் மிக முக்கியமான கேந்திரமாக விளங்கும்.

இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் வாகன அழிப்புக் கொள்கை மிகவும் முக்கியமான மைல் கல்லாகும். இளைஞர்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது.

சாலைகளில் ஓடுவதற்கு தகுதியற்ற மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களை உபயோகத்திலிருந்து முற்றிலுமாக நீக்க இந்த கொள்கை உதவும். இதனால் பாதுகாப்பான சூழல் உருவாகும். சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அனைவருக்கும் உள்ள பொறுப்புகளை உணர்ந்து பங்கேற்கும் வகையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

பழைய கார்களை அழிப்பதற்கு அந்த மையங்களில் விடும்போது அதற்கான சான்றிதழ் அளிக்கப்படும். இந்த சான்று வைத்திருப்போர் புதிதாக வாங்கும் வாகனத்திற்கு பதிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதேபோல சாலை வரியில் குறிப்பிடத்தக்க அளவு தள்ளுபடி சலுகையும் வழங்கப்படும். பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் அதற்கு செலவாகும் நிர்வாக செலவுகளையும் தனி நபர்கள் தவிர்க்க முடியும். அடிக்கடி பழுது பார்ப்பது, அதிக எரிபொருள் செலவு போன்றவற்றையும் தவிர்க்க முடியும். மேலும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அவர்களது உடல் ஆரோக்கியத்துக்கும் பலனளிக்கும். மேலும் பழைய வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளைத் தவிர்க்க முடியும்.

பழைய வாகனங்கள் என்பதாலேயே அவற்றை அழிக்க வேண்டும் என்பதில்லை. சாலைகளில் ஓடுவதற்கேற்ற தகுதி நிலையில் (பிட்னெஸ்) அவை உள்ளனவா என்பது சோதிக்கப்படும். இந்த சோதனையில் வெற்றியடையாத வாகனங்கள் மட்டுமே அழிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:

இப்புதிய வாகன அழிப்புக் கொள்கையால் மூலப் பொருள் செலவு 40 சதவீதம் வரை குறையும். ஆண்டுதோறும் ரூ. 22 ஆயிரம் கோடி மதிப்பிலான ஸ்கிராப் இரும்பு இறக்குமதி செய்யப்படுகிறது. இது செயல்படுத்தப்படும்போது இறக்குமதி குறையும். ஆட்டோமொபைல் உற்பத்தியின் கேந்திரமாக உருவெடுக்கவும்இந்தக்கொள்கை வழிவகுக்கும் என்று நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

அனைத்து மாவட்டங்களிலும் தனியார்பங்கேற்போடு வாகன தகுதி சோதனை மையங்கள் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. – பிடிஐ