முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27%, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யுஎஸ்) 10% இடங்களை ஒதுக்கி மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிலர் மனு தாக்கல் செய்தனர்.

இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருந்த நீட் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் தள்ளிவைக்கப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தி மருத்துவர்கள் கடந்த மாதம் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினராக கருதப்படுவர் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த டிசம்பர் 31-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

இந்நிலையில், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட 2 நீதிபதிகள் அமர்வு தொடர்ந்து 2 நாட்களாக விசாரணை நடத்தியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான சுருக்கமான வாதத்தை வெள்ளிக்கிழமை (இன்று) காலையில் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்யுமாறு மனுதாரர்கள் மற்றும் அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர். இன்று தீர்ப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.- பிடிஐ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here