சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களினால் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி இறக்க நேரிடுவதாகக்கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக அப்பகுதியில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை கடந்த பிப்.10-ம் தேதி முதல் அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் வாகனங்களின் அவசர, அத்தியாவசிய தேவைகளைக் கருத்தில் கொண்டு இரவு நேர போக்குவரத்தில் சில தளர்வுகளை மாவட்ட நிர்வாகம் அறிவி்த்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி முனீ்ஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ‘‘ பல ஆண்டுகளாக இப்பகுதிகளில் வசித்து வரும் உள்ளூர் மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாணவ, மாணவியரின் நலன், அத்தியாவசிய தேவைகளைக் கருத்தில்கொண்டு இந்த வழக்கில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில், வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, வனப்பகுதி சாலைகளை விரிவுபடுத்த அனுமதிக்கக்கூடாது என்றும், இந்த பகுதிகளில் 45 தனியார் சொகுசு விடுதிகள் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இப்பகுதியில் உள்ள 45 தனியார் சொகுசு விடுதிகளின் விவரங்களை சமர்ப்பிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.