வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் 11-ம் தேதி நடைபெற இருந்த மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை பிரிவுகளில் 11 படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. 2021-22-ம் கல்வி ஆண்டில் சேர 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு கடந்தாண்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட இருந்தது.

ஆனால், வன்னியர்களுக்கான10.5% இட ஒதுக்கீட்டை, உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ரத்து செய்ததாலும், அது தொடர்பான மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இந்தமாதம் நடைபெற இருந்ததாலும் தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டுக்கான இடங்களைத் தவிர, மீதமுள்ள பிற இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மாணவர்கள், பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், கடந்தமாதம் 28-ம் தேதி இளநிலை அறிவியல் (பி.எஸ்சி) பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வரும் 11-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கலந்தாய்வுதள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக, வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் மா.கல்யாணசுந்தரம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ‘‘நிர்வாக காரணங்களால் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.