மண் பானைகள், சட்டிகள் மீதான பொதுமக்கள் ஆர்வத்தால் பொங்கலுக்காக பானைகள் விற்பனை அதிகரித்து வருவதால் மண்பானை தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர் சூளைமேடு பகுதியில் பொங்கல் பானை தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள சில குடும்பத்தினர் மட்டும் தலைமுறை, தலைமுறைகளாக பானை மற்றும் அது சார்ந்த பொருட்களை தயாரித்து உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி ஆந்திர மாநிலம் சித்தூர், பலமநேர், பாகாலா உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக நொடிந்து போயிருந்த பானை தொழில் தற்போது மீண்டும் நல்ல முறையில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு மண் சட்டி, பானைகளை மக்கள் அதிகம் வாங்க ஆரம்பித்ததே காரணம் என கூறுப்படுகிறது.

இது தொடர்பாக சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மண் பானை தொழிலாளி சேகர் கூறும் போது, ‘‘பொங்கல் பானை கடந்தாண்டை விட இந்தாண்டு சற்று விலை உயர்ந்துள்ளது. அரை கிலோ, ஒரு கிலோ பச்சரிசி பொங்கல் வைக்கும் அளவுக்கான பானைகள் அதிகளவில் விற்பனையாகிறது.

இந்த வகை பானைகள் ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையான பானைகள் நகர்புறங்களில் அதிகமாக விற்பனையாகும். கிராமங்களில் 5 கிலோ அளவு பெரிய பானைகளில் சிலர் பொங்கல் வைப்பார்கள். இதற்காக, குறைந்தளவு பானைகள் தயாராகிறது. இந்த பானைகள் 500 ரூபாய் வரை விற்பனையாகிறது.

பொங்கல் பானையுடன் அதற்கான மூடியும் சேர்ந்து விற்பனை செய்யப்படுவது எங்களுக்கு கூடுதல் லாபமாக உள்ளது. தினசரி குறைந்தபட்சம் 50 பானைகளாவது விற்று விடுகிறோம்’’ என தெரிவித்தார்.அதேநேரம், சமையல் தொடர்பான வீடியோக்கள், ரீல்ஸ்களால் சட்டி, பானைகள் விற்பனையும் அதிகரித் துள்ளதாக கூறப்படுகிறது.

மண் சட்டிகளில் சமையல், பானைகளில் உணவு தயாரிப்பு பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளதால் தங்களது தொழில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக கூறும் சேகர், ‘‘இப்போதெல்லாம் சட்டி பிரியாணி, தந்தூரி டீ சொப்புகள், மீன் சட்டி குழம்பு தயாரிப்புக்கு அதிக ஆர்டர் வருகிறது.

குழந்தைகளுக்கான சிறிய சொப்புகள், உண்டியல்கள் விற்பனையும் இப்போது அதிகரித்து வருகிறது. வீடுகளில் அலங்காரத்துக்காக தொங்கவிடும் லவ் பேர்ட்ஸ் தயாரிப்பும் அதிகமாக செய்து வருகிறோம். மக்கள் மனம் மாறியிருப்பதால் எங்கள் தொழில் காப்பாற்றப் பட்டுள்ளது’’ என்றார்.