Site icon Metro People

உற்பத்தி உயர்வு, நுகர்வு குறைவால் கறிக்கோழி விலை சரிவு: நாமக்கல் பண்ணையாளர்கள் அதிர்ச்சி

கறிக்கோழி விலை நேற்று ஒரே நாளில் ரூ.12 குறைந்து ரூ.84 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கறிக்கோழி பண்ணையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, பல்லடம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பிராய்லர் கறிக்கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கறிக்கோழிகள் தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் நாள்தோறும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதற்கான விலையை பல்லடத்தில் செயல்படும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு (பிசிசி) நிர்ணயம் செய்கிறது.

இதன்படி ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கறிக்கோழி விலை நேற்று ஒரே நாளில் ரூ.12 குறைத்து ரூ. 84 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இது கறிக்கோழி விற்பனையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாமக்கல்லைச் சேர்ந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, கறிக்கோழி உற்பத்தி 35 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையே இதற்கு காரணம். அதேவேளையில் சபரிமலை சீசன் என்பதால் இறைச்சி நுகர்வு குறைந்துள்ளது.

உற்பத்தி மிகுதி மற்றும் நுகர்வு குறைவு காரணமாக கறிக்கோழி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. பிசிசி நிர்ணயம் செய்யும் விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கே வியாபாரிகள் கறிக்கோழிகளை கொள்முதல் செய்கின்றனர். இதனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கறிக்கோழிப் பண்ணையாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Exit mobile version