புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்க டெண்டர் விடப்பட்டுள்ளதை எதிர்த்து மின்துறையில் ஊழியர்கள், பொறியாளர்கள் 2ம் நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சூழலில் புதுச்சேரி, காரைக்காலில் நேற்று இரவு முதல் நகரம், கிராமங்களில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு மக்கள் மறியல்கள் ஈடுபட்ட வருகின்றனர்.

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஏற்கெனவே மின்துறை பொறியாளர்கள்- ஊழியர்கள் தனியார்மயத்தை எதிர்த்து போராட்டக்குழு உருவாக்கி காலவரையற்ற வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் மயமாக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதால் மீண்டும் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் மின்துறையில் பணியாற்றும் 2 ஆயிரம் பேர் முழுக்க வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்தம் செய்த மின் ஊழியர்கள் வாணரப்பேட்டை தலைமை அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மின்துறை தனியார்மய டெண்டரால் மின்தடை ஏற்பட்டால் சரி செய்யமாட்டோம். மின் கட்டணம் வசூல் செய்யமாட்டோம் என்ற பணியிலிரும் ஈடுபடமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தப் போராட்டத்தால் நேற்று மாலை முதல் நகரம், கிராமப்பகுதிகளில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இந்திரா காந்தி, வில்லியனூர், திருக்கனூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போராட்டத்தினால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.போலீஸார் சமாதானப்படுத்தியும் பல பகுதிகளில் மறியல் தொடர்ந்தது.

இந்த நிலையில் 2ம் நாளாக மின்துறை ஊழியர்கள், பொறியாளர்கள் போராட்டம் தொடர்கிறது. மின்துறை தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்தினால் இன்று காலை முதல் நகரம், புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. காலையில் பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்வோர் கடும் அவதிக்கு ஆளானார்கள். மின்தடை காரணமாக மோட்டார்கள் இயங்காமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது. மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். மின்துறை உயர் அதிகாரிகள், மின்துறை செயலர் அருண் உட்பட யாரும் தொலைபேசியை எடுப்பதை தவிர்த்தனர்.

மின்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை தொடர்பு கொண்டபோது அவர் குஜராத் சென்றுள்ளதாக தெரிவித்தனர். அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளததால் மக்கள் தவிக்கின்றனர். போராட்ட நிர்வாகி வேல்முருகன் கூறுகையில்: “மின்துறை செயலர் அருண் எங்களை அழைத்து பேசினார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைத்து தனியார்மயத்துக்கு கையெழுத்து வாங்கி அனுப்பிவிட்டதாக செயலர் தெரிவித்தார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். மின் தடைக்கு நாங்கள் பொறுப்பல்ல. இயற்கையாக ஏற்பட்டது. அரசும், மின்துறை நிர்வாகமும்தான் பொறுப்பு” என்று குறிப்பிட்டார்.